திருக்கல்யாண நிகழ்ச்சி
பொள்ளாச்சி மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜோதி நகர் அமைதி காலனியில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன், வெள்ளையம்மன், பொம்மியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி நோன்பு சாட்டுதல் நடந்தது. தொடர்ந்து கடந்த 7-ந் தேதி ஊர் சாந்துவுடன் திருவிழா தொடங்கியது. 8-ந் தேதி பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மதுரை வீரன் வெள்ளையம்மன், பொம்மியம்மன் ஆகியோர் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான மதுரைவீரன், வெள்ளையம்மன், பொம்மியம்மன் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மாங்கல்யம், பூமாலைகள், பட்டாடைகள், மஞ்சள் கயிறு, பழங்கள், உள்ளிட்ட 16 வகையான சீர்வரிசையுடன் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக மதுரை வீரன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்ய ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.