ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்இன்று தேரோட்டம்
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. அன்று இரவு அன்னபக்சி வாகனத்திலும், கடந்த 21-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 22-ந்தேதி அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி கருட வாகனத்திலும், நேற்று முன்தினம் யானை வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி திருவீதிஉலாவும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. அன்றைய தினம் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.