சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜாரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25-ந் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆணவத்தோடு எதிரே வந்த போது, சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு வதம் செய்தார். முடிவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 7-ம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் சரவணன் தலைமையில் அர்ச்சகர்கள் ஸ்ரீதர், ஆனந்த், விஜய் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நடந்த திருக்கல்யாணத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.