உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்


உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில்  திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சதுர்த்தி விழா

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உப்பூரில் உள்ள ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 8 -வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தில் விநாயகர் மற்றும் சித்தி-புத்தி தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணம்

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணசெட்டியார் மற்றும் மண்டகப்படியார்கள் ஆகியோர் முன்னிலையில் சரியாக மாலை 4.30 மணிக்கு விநாயகர் சித்தி, புத்தி தெய்வங்கள் இருவரின் கழுத்திலும் புேராகிதர்கள் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கும் சித்தி, புத்திக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர். மேலும் திருக்கல்யாணம் விருந்தாக பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்திக்கடன்

பின்னர் இரவு குதிரை வாகனத்தில் விநாயகர் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தார். திருவிழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகின்றது.

திருவிழாவின் 10-வது நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் சதுர்த்தியை முன்னிட்டு உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணதேவர் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் கோவிலில் இருந்து சப்தவர்ணம் வெள்ளி கோரதம் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி புறப்பட்டு உப்பூர் கடலில் தீர்த்தம் ஆடி தீர்த்தவாரி பூஜைகள் முடிந்த பின்னர் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் பக்தர்கள் வெள்ளத்தில் விநாயகர் கோவிலை வந்தடைந்த உடன் பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் வெள்ளி கோரதம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தருக்கு அருள்பாலிக்க உள்ளார்.


Next Story