திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோவிலுக்கு மினி பஸ் இயக்கம்


திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோவிலுக்கு   மினி பஸ் இயக்கம்
x

திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவிலுக்கு மீண்டும் மினி பஸ் இயக்கப்பட்டது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூரில் இருந்து நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ரவணையன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், ராமன் கோட்டகம், வெள்ளத்திடல் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செம்பனார்கோவிலுக்கு பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். அதேபோல வேலை நிமித்தமாக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் திருக்கடையூர், செம்பனார்கோவில் பகுதிகளுக்கு சென்ற வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதியின்றி தொழிலாளர்களும், மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவில் வரை இயக்கப்பட்ட மினி பஸ்சும் கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் பஸ் இயக்கம்

ஆகவே, மேற்கண்ட பகுதி மக்களின் நலன்கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகி இருந்தது.

இதன் எதிரொலியாக திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவிலுக்கு மீண்டும் மினி பஸ் இயக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.Next Story