திருமாநிலையூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிந்து 10 மாதத்தில் திறக்கப்படும்: அமைச்சர் பேட்டி
திருமாநிலையூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிந்து 10 மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
22 புதிய திட்டப்பணிகள்
கரூர் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரூ.13 ேகாடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 22 பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 3 பகுதிநேர ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பஸ் நிலையம் ரவுண்டானாவில் ரூ.13 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், முனியப்பன் கோவில் அருகில் ஈரோடு, கோவை சாலை பிரிவில் ரூ.14 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் ஈரோடு ரவுண்டானாவில் சாலை செயற்கை நீரூற்று மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும், லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை அருகில் ரூ.20 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், திருமாநிலையூர் ரவுண்டானா பெரியார் சிலை அருகில் ரூ.13 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், திருமாநிலையூர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகள் உள்ளிட்ட 22 பல்வேறு புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
புதிய பஸ் நிலையம்
முன்னதாக திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கரூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 2-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இன்னும் 10 மாத காலத்திற்கு உள்ளாகவே இந்த புதிய பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. தற்போது அமையவிருக்கின்ற பஸ் நிலையம் புறநகர் பஸ் நிலையமாகவும், கரூரில் உள்ள பஸ் நிலையம் நகர பஸ் நிலையமாகவும் மாற்றியமைக்கப்படும்.
முருங்கை பூங்கா அமைப்பு
கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான உத்தரவுகளை முதல்-அமைச்சர் வழங்கி இருக்கிறார். இன்னும் 15 தினங்களுக்குள் அந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு மாவட்ட கலெக்டர் மூலமாக கருத்துருக்கள் அனுப்பப்பட்டு விரைவில் கரூரில் குறிப்பாக அரவக்குறிச்சியில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது, என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாநகராட்சி துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை பணிகள் தொடக்கம்
புகழூர் நகராட்சிக்குட்பட்ட புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையும், ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புகழூர் நகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், இளங்கோ எம்.எல்.ஏ., புகழூர் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணி
கரூர் மாநகராட்சி, திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ேபரணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஜவகர் பஜார், தலைமை தபால் நிலையம் வழியாக சென்று கரூர் மாநகராட்சி அலுவலகம் வரை சென்றது. ேபரணியில் கலந்து கொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் உள்ளிட்ட வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான உறுதி மொழியினை அனைவரும் எடுத்து கொண்டனர்.