அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வை பொசுக்கி, அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னிபத்' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக, 4 ஆண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆள் எடுத்து அவர்களை அக்னிவீரர்கள் என பயிற்சியளித்து பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்ற இந்த திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவை சிதைப்பதாகவுள்ளது.
எனவே இந்த திட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும். வேலை வாய்ப்பின்மையால் விரக்தியடைந்த இளைஞர்கள் வெடித்தெழும் தீயாய் வெகுண்டெழுந்து போராடி வரும் இன்றைய சூழலில், ஏற்கனவே தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை உடனே அறிவித்திட மோடி அரசு முன்வரவேண்டும்.
'அக்னிபத்' என்ற திட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்த கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், இதுவே மோடியின் கார்ப்பரேட் தரகு ஆட்சியை 2024-ல் தூக்கி எறிவதற்கு வழிவகுப்பதாகவும் அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.