திருமூர்த்திமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


திருமூர்த்திமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x
திருப்பூர்


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களு்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் தை, புரட்டாசி மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

மாட்டு வண்டிகளில்

அந்த வகையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் நேற்றுகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். பின்னர் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகள், விநாயகர், முருகன், சப்த கன்னிகளையும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஒரு சில பொதுமக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து பிண்டம் வைத்து திதியும், தர்ப்பணமும் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் வளாகம், அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

அத்துடன் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆடி அமாவாசையையொட்டி போக்குவரத்து கழகத்தின் சார்பில் உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

பக்தர்கள் அவதி

ஆனால் பஸ்கள் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வயதான பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்ததுடன் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

ஒவ்வொரு முறையும் விசேஷ நாட்களின் போது அரசு பஸ்கள் கோவில் வரையிலும் இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தற்போது வரையிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story