திருமுருகன்பூண்டி நகராட்சி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்
திருமுருகன்பூண்டி நகராட்சி யில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தலைவர் குமார் உறுதியளித்தார்.
நகராட்சி கூட்டம்
திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆண்டவன், துணை தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
லதாசேகர் (அ.தி.மு.க.): - 11-வது வார்டு ஜெயம் கார்டனில் நல்ல தண்ணீர் பிரச்சினை உள்ளது. ஏ.டி. காலனியில் பொது கழிவறை வேண்டும். வார்டு முழுவதும் புதிய தெருவிளக்குகள் அமைப்பதுடன் கொசுமருந்து தௌிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன் (தி.மு.க.) - 8-வது வார்டில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க முடியாததால் பொதுமக்களுக்கு பதில்கூற முடியவில்லை. சாக்கடை கால்வாய் அமைத்துத் தரக்கோரி 1½ ஆண்டுகளாக வலியுறுத்துகிறேன். தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
கார்த்திகேயன் (அ.தி.மு.க.): - 4-வது வார்டில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். வி.ஜி.வி. கார்டன் அருகே அவினாசி பிரதான சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். அழகாபுரி, சொர்ணபுரி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து உப்புத் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
நல்லாறு
சுப்பிரமணியன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ):- 10-வது வார்டு பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். நல்லாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதுடன், புதர் மண்டி கிடக்கிறது. எனவே அதை தூர்வார வேண்டும்.
நடராஜ் (அ.தி.மு.க.):- 6-வது வார்டில் இன்னும் பணிகள் நடைபெறவில்லை. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாயில் இருந்து எடுக்கப்படும் மண்ணை முழுமையாக அகற்ற வேண்டும்.
கதிர்வேல் (இந்திய கம்யூனிஸ்டு.) - 15-வது வார்டு ராக்கியாபாளையம் பகுதியில் புதிய வடிகால் அமைக்க வேண்டும்.
தேவராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு.) - 14-வது வார்டு சிவாநகரில் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். புதிய குடிநீர் இணைப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கம் பூபதி (அ.தி.மு.க.) - 18-வது வார்டு ஜே.ஜே.நகரில் குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு ரூ.5½ லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்க கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை.
லீலாவதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி.) - 24-வது வார்டில் உள்ள சமுதாயநலக் கூடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து நகராட்சி தலைவர் குமார் பேசியதாவது:-
நடவடிக்கை
நகராட்சியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்கு நகராட்சி சார்பில் பணியாற்ற 14 ஊழியர்களை கேட்டுள்ளோம். புதிய குடிநீர் இணைப்புகளை வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமுருகநாதசுவாமி கோவில் அருகே மயில்வாகன கட்டிடத்தை ஒட்டி கோவில் நிலத்தின் அருகே அமைக்கப்படும் சாக்கடை கால்வாய் பணிக்கு கோவில் செயல் அலுவலர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. முறையாக அனுமதி வாங்கிய பின்னர் அந்த பணி நடைபெறும். தெருவிளக்கிற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாததால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. திருமுருகன்பூண்டி நகராட்சி 27 வார்டுகளிலும்அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.