ஒரே சிறுநீரகம் கொண்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
ஒரே சிறுநீரகம் கொண்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
திருப்புவனம்
திருப்புவனத்தை சேர்ந்த 24வயது பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரவசத்திற்காக திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் இருந்த குழந்தையின் தலை திரும்பாததால் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க முடிவு செய்த டாக்டர் ஸ்ரீவித்யா தலைமையில், மயக்கவியல் நிபுணர் டாக்டர் துர்கா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:- பிரசவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணை பரிசோதனை செய்தபோது அவருக்கு பிறவியிலேயே ஒரே ஒரு சிறுநீரகம் இருந்தது தெரியவந்தது. அந்த சிறுநீரகமும் வித்தியாசமாக குதிரை போன்ற வடிவத்துடன் இருந்ததால் சுகபிரசவத்திற்கு வாய்ப்பில்லாமல் போனதாலும், குழந்தையின் தலையும் திரும்பாததால் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது தாயும், சேயும் நல்ல நிலையில் உள்ளனர். இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் குறைந்தது ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்த அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றனர்.