கொட்டித்தீர்த்த மழை
மங்கலம், இடுவாய் பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
குடியிருப்பு பகுதியில் மழைநீர்
திருப்பூர் அருகே இடுவாய், சின்னாண்டிப்பாளையம் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது.
சீரங்ககவுண்டம்பாளையம் பாலத்தில் குப்பைகள் அடைக்கப்பட்டதால் மழைநீர் அந்த வழியாக செல்ல முடியாமல் ரத்தினசாமி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சாயப்பட்டறை வளாகத்தின் வழியாக தண்ணீர் பாய்ந்து குட்டைக்கு சென்றது. திடீர் மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கால்வாயில் மோட்டார்சைக்கிள்
இதுபோல் காலேஜ் ரோடு கல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரெயில்வே ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் கழிவுநீருடன் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழைவெள்ளத்தில் ஒருவரின் மோட்டார்சைக்கிள் அடித்து செல்லப்பட்டு அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் சிக்கியது.
அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிய மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டனர்.
மேலும் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் சென்றதால் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.திருப்பூர் மாநகர பகுதியிலும் பரவலாக தூறலுடன் மழை பெய்தது.