திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
3 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
3 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ேநற்று 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு உள்பட ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
3 மாத ஊதியம்
இந்த போராட்டத்திற்கு ஆங்கில துறைத் தலைவர் யோகபிரகாசம் தலைமை தாங்கினார். இக்கல்லூரியில் பணி புரிந்துவரும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் மற்றும் 1.1.2020 முதல் அரசு அறிவித்த உயர்த்தப்பட்ட ஊதிய நிலுவை தொகை, அனைத்து கல்லூரி விரிவுரையாளர்களுக்கு வழங்குவது போல் சம ஊதியம் வழங்க வேண்டும்.
அலுவலக பணியாளர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரின் ஆணையின்படி 1.1.2020 முதல் பல்கலைக்கழகத்தில் வழங்குவது போல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி ஆசிரியர் கூட்டணி செயலாளர் தனிகைராஜன், பொருளாளர் நந்தினி, துணைத்தலைவர் ஓம்பிரகாஷ், துணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட 30 விரிவுரையாளர்கள் மற்றும் 4 அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.