தஞ்சை மாவட்டம் திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்பு


தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் திருவையாறில் 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தியாகராஜர் ஆராதனை விழா

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஆண்டு தோறும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு மார்கழி மாதம் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 2 நாட்கள் மட்டுமே விழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் 6 நாட்கள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு 176-வது ஆராதனை விழா, கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விழாவை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழா நாட்களில் தினமும் பல்வேறு இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

கவர்னர் ஆர்.என்.ரவி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராமபிரான்

ஸ்ரீராமரின் மிகப்பெரிய பக்தர்களில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த இப்பகுதிக்கு வந்திருப்பதால், ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்கிறோம். திருவையாறில் தான் தியாகராஜ சுவாமிகள் ராமபிரானை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை பாடியுள்ளார்.

ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம் பெற்றுள்ளார். நம் நாட்டின் கலாசாரத்தின் அடையாளமாக ராமபிரான் திகழ்கிறார். ராமபிரானால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாரதத்தின் வளர்ச்சி

இந்த நாடு சர்வாதிகாரிகளால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல்கள் உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது. இந்த சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே நம் பாரதத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. இந்த பாரத நாடு தெற்கிலிருந்து தொடங்கி ஒரே குடும்பம், ஒரே நாடாக ஒன்றிணைந்து உள்ளது.

பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.. ராமபிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. எனவே நம் பாரதம் ஆன்மிக உணர்வுடன் கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது.

உலகிற்கு தலைமை தாங்கும்

நமது பாரத நாடு 18-ம் நூற்றாண்டு வரை உலகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய வல்லரசாக திகழ்ந்தது. அதன் பிறகு வந்த காலனியாதிக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நம் நாடு உலகிற்கு தலைமை தாங்கும் நிலைக்கு உயரும்.

உலக அளவில் பல ஏற்றத்தாழ்வுகளை பல நாடுகள் கண்டு வருகிறது. விவேகானந்தரின் கனவுகளில் இந்தியா உருவாகி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அறங்காவலர்கள் சந்திரசேகரமூப்பனார், சுரேஷ்மூப்பனார், கணேசன், பஞ்சநாதம், டெக்கான்மூர்த்தி, சுந்தரம், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், அருண், பாபநாசம் அசோக்மணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன், அம்மாப்பேட்டை வடக்கு வட்டார த.மா.கா. தலைவர் சுலைமான்பாட்சா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சபை செயலாளர் ஸ்ரீ முஷ்ணம்ராஜா ராவ் நன்றி கூறினார்.

500 இசை கலைஞர்கள்

தியாகராஜர் முக்தி அடைந்த பகுகுள பஞ்சமி தினத்தில் காவிரி ஆற்றங்கரையில் பிரபல இசை கலைஞர்கள் சுதாரகுநாதன், மகதி, ஜனனி, அருண், பின்னிகிருஷ்ணகுமார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒருமித்த குரலில் பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜருக்கு பல்வேறு வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக காலை 5.45 மணிக்கு திருவையாறு திருமஞ்சனவீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவருடைய சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும், மேளதாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக விழா பந்தலுக்கு தியாகராஜர் சிலை எடுத்து வரப்பட்டது.

உள்ளூர் விடுமுறை

தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story