17 ஆண்டுகளுக்கு பிறகு திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


17 ஆண்டுகளுக்கு பிறகு திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

தேவார பாடல் பெற்ற திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், நடுநாட்டின் தேவார திருப்பதிகங்கள் மூவரால் தேவார பாடல் பெற்ற 21-வது திருத்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் அரசர்களால் விடுபட்ட ராஜகோபுர திருப்பணியை பக்தர்களின் உதவியுடன் 110 அடி உயரமுள்ள ஏழு நிலைகள் அமைத்து 14.9.2005-ம் ஆண்டு விழுப்புரம் கயிலை ஆர்.குபேரன் செட்டியாரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழா

இதற்கான விழா கடந்த 28-ந் தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 29-ந் தேதி காலை புனிதநீர் கங்கா பூஜையும் 30-ந் தேதி காலை அக்னிசங்கிருகனம் பூஜை, பரிவார கலசங்கள், யாகசாலைகளுக்கு அலங்காரம், 108 கோ பூஜையும், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், திரவிய ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், ஆன்மிக திருக்கயிலாய நடன நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம் நடந்தது. பின்னர் 6 மணிக்கு மேல் அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கடம் புறப்பாடாகி கோவிலின் ராஜகோபுரங்கள், பிரதான விமானங்கள் மற்றும் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இதில் விழுப்புரம், திருவாமாத்தூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சாமி அம்பாள் மகா அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

9 மடாதிபதிகள்

கும்பாபிஷேக விழாவை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கவுமார மடாலய சிறவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் தவஞானி பாலமுருகனடிமை சுவாமிகள், கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், வானூர் திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில் தணிகாசலம் சுவாமிகள், திருவாமாத்தூர் மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கவுமார மடாலய தண்டபாணி சுவாமிகள் உள்ளிட்ட 9 மடாதிபதிகள் நடத்தி வைத்தனர்.

கலந்துகொண்டவர்கள்

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் விஜயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாமாத்தூர் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணி கமிட்டி முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.குபேரன் செட்டியார், கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி மற்றும் கோவில் பணியாளர்கள், திருவாமாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story