இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 8 திருமண ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று திருமண விழா நடந்தது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மணமக்களுக்கு 2 கிராம் தாலி, மெட்டி மற்றும் புத்தாடை, மணமாலை ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க மங்கள இசையுடன் 8 ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண ஜோடிகளுக்கு காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை தாம்பூலத்தட்டு, இரண்டு குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், சில்வர் தட்டுகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.