திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவப்பூர் முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திருவிழா கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், கரும்பில் தொட்டில் கட்டி வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பால் குடம்
இந்த நிலையில் விழாவின் 9-ம் நாளான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தேர்த்திருவிழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். மேலும் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். இதேபோல் ஆதிவாசி போலவும், அம்மன் வேடமும், முகம் மற்றும் உடலில் வண்ண பொடிகளை பூசியபடியும் பக்தர்கள் பலர் வந்தனர்.
தாரை தப்பட்டைகள், மேள தாளம் முழங்க இளைஞர்கள் பலர் நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தின் வெளிப்பகுதியில் திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பால்குடம் எடுத்து வந்தவர்களும், அக்னி சட்டி, அலகு குத்தி வந்தவர்களும் தீமிதித்தனர். இதேபோல் பக்தர்கள் சிலர் பறவை காவடி எடுத்தும் வந்தனர். கோவில் வளாகத்தில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் தலையாக தென்பட்டது.
தேரோட்டம்
விழாவில் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை காட்டுமாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. உற்சவர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் தேரோட்டத்தை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
அதன்பின் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்தது. சரியாக மாலை 4.48 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரடி வீதிகளை சுற்றி தேர் நிலைக்கு மாலை 6.20 மணிக்கு வந்தடைந்தது. தேர் சரியாக நிலையில் செல்வதற்காக தேரின் பின்னால் பொக்லைன் எந்திரம் பின்தொடர்ந்து சென்றது.
போக்குவரத்து நெரிசல்
விழாவையொட்டி புதுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக இருந்ததால் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முதல் திருவப்பூர் கோவில் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரில் ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர், குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பல இடங்களில் இரவில் இன்னிசை கச்சேரியும் நடந்தது.
விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவில் தொடர்ந்து தினமும் அம்மன் புறப்பாடு நடைபெற உள்ளது. வருகிற 21-ந் தேதியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.