ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
ராமேசுவரம் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
பிரதிஷ்டை திருவிழா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டைதிருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் திட்டக்குடி சந்திப்பு சாலையில் ராமபிரான் 10 தலை கொண்ட ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து சாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. 8-ந் தேதி மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடு
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 9-ந் தேதி பகல் 12.30 மணிக்கு கோவிலின் உள்ளேயே நடைபெறுகிறது. ஏற்பாடுகளை துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ராமபிரான், சீதா தேவி சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபடுவது போன்றும் அருகில் ஆஞ்சநேயர், முனிவர் மற்றும் வானர சேனைகள் கற்களால் ஆன சிலைகள் அமைத்து ஒளி-ஒலிகாட்சிக்கூடம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
கோரிக்கை
தற்போது இந்த ஒலி-ஒளி காட்சிக் கூடம் செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. அனைத்து சாமி சிலைகளும் தூசி படிந்து சேதம் அடைந்த நிலையிலும் காட்சி அளித்து வருகிறது.
இங்குள்ள சிலைகள் அனைத்தையும் பராமரிப்பு செய்து மீண்டும் ஒலி-ஒளி காட்சிக் கூடம் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.