உடல் முழுவதும் சேறுபூசி பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அழகுவள்ளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அழகுவள்ளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை அழகுவள்ளி அம்மன் கோவில், ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் காலை கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் இரவு வாணவேடிக்கையுடன் சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளம் முழங்க அம்மன் சக்திகரகம் எடுத்து கிராமம் முழுவதும் நகர் வலம் வந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு வந்து அழகுவள்ளி அம்மன் முன்பாக வைத்து முளைப்பாரியை சுற்றி வலம் வந்து கும்மிபாட்டு பாடி வழிபட்டனர்.
நேர்த்திக்கடன்
பின்னர் ஆண்கள் கும்மியடித்து வழிபட்டனர். சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் வினோதமான முறையில் உடல் வயிற்று பகுதியில் இருபுறமும் பெரிய அளவிலான ஊசியை உடலில் துளைத்து சிலா குத்துதல் என்ற நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பின்னர் சிறியவர் முதல் பெரியவர் வரை 100-க்கும் மேற் பட்டோர் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அக்னிச் சட்டி 51, 101 சட்டி, பால்குடம், பூப்பெட்டி என ஏராள மான நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
முளைப்பாரி ஊர்வலம்
கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.