தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறைக்கு இதுதான் காரணம்...! விசாரணையில் பரபரப்பு தகவல்


தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறைக்கு இதுதான் காரணம்...!  விசாரணையில் பரபரப்பு தகவல்
x

மாணவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

கள்ளக்குறிச்சி:

கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலுாரை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மாணவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீயிட்டு, பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பிரவீன்குமார் டி.ஐ.ஜி.அபிநவ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ராதா கிருஷ்ணன், கிங்கஷ்லின், முத்துமாணிக்கம், சந்திரமவுலி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள சிறப்பு காவல் படை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளியில், நேற்று மாலை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு, கலவரக்காரர்கள் சேதப்படுத்திய பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், தீயிட்டு கொளுத்தப்பட்ட பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை பார்வையிட்டனர்.

அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர் இதில், ஒரு குழுவினர் பள்ளியில் ஏற்பட்ட சேதம் மற்றும் தீயில் எரிந்த வாகன சேதங்களைக் கணக்கீடு செய்ய உள்ளனர். ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிய, கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதியில் உள்ள டோல்கேட்டுகள் மற்றும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளனர். மற்றொரு குழுவினர் பள்ளியில் கலவரம் நடந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மொபைல் எண்களைக் கண்டறிய 'தம் டவர் ஆப்பரேட்' செய்து, விபரங்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக, மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான்.

பள்ளி தாளாளர் ரவிக்குமார், அதிக கடனில் இருந்துள்ளார். இதனால், கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார். எந்த அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார்.

இதனால், ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு கோபம் இருந்துள்ளது. பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். தன் தாய் சிறிய அளவில் தொடங்கிய பள்ளியை, ரவிக்குமார் வங்கியில் கடன் பெற்று விரிவுபடுத்தியுள்ளார். அரசியல் கட்சியினரிடமும் ரவிக்குமார் பகையை சம்பாதித்து உள்ளார்.

இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே, இந்த கலவரத்திற்கு காரணம் ஆகும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


Next Story