குமரி உள்பட 4 மாவட்டங்களில் இந்த ஆண்டில் 169 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; ஐ.ஜி. அஸ்ரா கார்க் தகவல்


குமரி உள்பட 4 மாவட்டங்களில் இந்த ஆண்டில் 169 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; ஐ.ஜி. அஸ்ரா கார்க் தகவல்
x

குமரி உள்பட 4 மாவட்டங்களில் இந்த ஆண்டில் இதுவரை 169 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி உள்பட 4 மாவட்டங்களில் இந்த ஆண்டில் இதுவரை 169 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல ஐ.ஜி.

தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா காா்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு இதுவரை நெல்லை மாவட்டத்தில் 44 பேர், தென்காசி மாவட்டத்தில் 33 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 பேர் என மொத்தம் 169 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நன்னடத்தை பிணையம்

இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ரவுடிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 554 ரவுடிகள் என மொத்தம் நெல்லை சரகத்தில் 2,256 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த ஆண்டு திருநெல்வேலியில் 714 போ் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல தென்காசி மாவட்டத்தில் 552 பேரும், தூத்துக்குடியில் 1,113 பேரும், கன்னியாகுமரியில் 919 பேரும் என மொத்தம் நெல்லை சரகத்தில் 3,298 பேர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்குகள்

இந்த ஆண்டில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கஞ்சா வழக்கில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.704 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 28 கஞ்சா வழக்கில் 71 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 16.501 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 42 கஞ்சா வழக்கில் 76 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 15.232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்கில் 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் நெல்லை சரகத்தில் 123 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 270 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பொருட்கள் மீட்பு

இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 142 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.46 லட்சத்து 86 ஆயிரத்து 304 மதிப்பிலான திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல தென்காசி மாவட்டத்தில் 168 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.49 லட்சத்து 13 ஆயிரத்து 720 மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 209 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரத்து 260 மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

91 போக்சோ வழக்குகளுக்கு தண்டனை

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவாி முதல் ஏப்ரல் வரை கடந்த 4 மாதங்களில் தென்மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் மட்டும் 91 போக்சோ வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது. அவ்வாறு தண்டனையில் முடிந்த வழக்குகளில் 11 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 31 வழக்குகளில் 20 ஆண்டுக்கு மேலான சிறை தண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் இரு நபர்கள் சம்மதத்துடன் காதலின்பால் ஏற்பட்ட பரஸ்பர காதல் உறவு சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட 150 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மனிதாபிமான அடிப்படையில் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், 41-A கு.வி.மு.ச படி சம்மன் சார்பு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story