தமிழகத்தில் இந்த ஆண்டு 43 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல்


தமிழகத்தில் இந்த ஆண்டு 43 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல்
x

தமிழகத்தில் இந்த ஆண்டு 43 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல்

தஞ்சாவூர்

தமிழகத்தில் இந்த ஆண்டு 43 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தஞ்சையை அடுத்த மடிகையில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்கூட்டியே கொள்முதல்

தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை நெல்கொள்முதல் பருவமும் செப்டம்பர் 1-ந் தேதியே தொடங்கப்பட்டது. இதுவரை 2½ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் டன் நெல் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு திறந்த வெளியில் நெல் இருக்கக்கூடாது என்பதற்காக 3 லட்சம் டன்கள் சேமிக்கும் வகையில் 20 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி அக்டோபர் 31-ந் தேதிக்குள் நிறைவடையும். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக குறுவை பயிர் செய்யப்பட்டுள்ளது.

11 லட்சம் டன் சேமிப்பு

எனவே 3 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 20 கிடங்குகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், கூடுதலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம், கூட்டுறவுத் துறைக்கட்டிடங்கள் என 7.94 லட்சம் டன்கள் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் 11 லட்சம் டன் நெல்லை பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியும்.

தமிழகத்தில் வருங்காலத்தில் தனியார் பங்களிப்புடன் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தேனி ஆகிய ஊர்களில் 13 புதிய நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்கி உடனடியாக அரவை செய்வதற்காக ஆலைகளின் எண்ணிக்கை 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரப்பதம் அதிக்க வேண்டும்

நெல் ஈரப்பதம் 21 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கடந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசிடம் இருந்து ரூ.2,500 கோடி மானியம் வந்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு 60 மூட்டைகள் வரை தான் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதற்காக ஆன்லைனில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அன்புராஜா, கண்காணிப்பாளர் முத்துசாமி, கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story