தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாப்பாத்தி சின்னவழியான் தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர் விஸ்தரிப்பு, புதிய சாலைகள், பழமை வாய்ந்த கட்டிடங்களை சீரமைப்பு செய்தல் உள்பட பல்வேறு பணிகள் தேர்வு செய்தல் மற்றும் செலவினங்கள் குறித்து 28 தீர்மானங்களை அலுவலர் பழனிகணேஷ் வாசித்தார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினர். இதில் கவுன்சிலர் முருகேசன் பேசுகையில், கழுகூர் ஊராட்சியில் உள்ள பூசாரிப்பட்டிக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சுமதி பேசுகையில், ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்திற்கு மேற்கூறை அமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் புவனேஸ்வரன் பேசுகையில், பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டி அண்ணா நகர் காலனிக்கு பஸ் வசதி வேண்டும். சின்னரெட்டிபட்டி முதல் பாதிரிப்பட்டி வரை தார்சாலை அமைக்க வேண்டும். பொம்மாநாயக்கனூர், கன்னல்வடநாயக்கனூர், எட்டமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு சிறு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சின்னையன் பேசுகையில், எனது பகுதியில் சிதிலமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் பேசுகையில், தேசியமங்களம் முதல் கூடலூர் பேரூர் வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பைப் லைன் விஸ்தரிப்பு பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார். தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story