நெல்லையில் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
x

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திராசெல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாது

தாக்குதலில் காயம் அடைந்த சந்திரா செல்வியிடம் விசாரித்தபோது, தன்னை தாக்கியவர்களை கூட அண்ணன் என்று பெருந்தன்மையுடன் கூறும் பழக்கம் தான் அவரிடம் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தாக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு வெளியே வரலாம் என்ற எண்ணத்துடன் அங்கு செல்ல முடிகிறது என்றால் சட்டமும், காவல்துறையும் தம்மை ஒன்றும் செய்யாது என்ற நினைப்பில் தான் அவ்வாறு செய்துள்ளனர்.

இதுபோன்ற சாதி கொடுமையால் தான் பலர் மதம் மாறி உள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்களாக மாறி இருக்கின்றனர். இந்துத்துவா அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் மாணவர்களுக்கு பயிற்சி தருகிறோம் என்று கூறி பள்ளிகளில் சாதி, மதத்தை பரப்புகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

நீதி வேண்டும்

நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் அப்போது தான் மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு நீதி வேண்டும். நாங்குநேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். திசையன்விளை பகுதியை சேர்ந்த முத்தையா கொலையை ஆணவக்கொலையாக பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மண்டல செயலாளர் சுந்தர் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் முத்துவளவன், எம்.சி.சேகர், அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர்கள் கரிசல் சுரேஷ், மாதவி, திருமாவேந்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவட்ட பொருளாளர் பழனி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story