தூத்தூ கண்மாயில் மீன்பிடி திருவிழா


தூத்தூ கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

பொன்னமராவதி அருகே தூத்தூ கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மீன்களை அள்ளிச்சென்றனர்.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி அருகே கடந்தாண்டு பெய்த மழையால் நடைபெற்ற விவசாயம் தொடர்ந்து நடைபெறவும், வரும் ஆண்டு சிறப்பாக மழை பெய்து கண்மாய், குளங்கள், நீர்நிலைகள் பெருகவேண்டியும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் தூத்தூர் ஊராட்சியில் தூத்தூ கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

தூத்தூர் அய்யனார் கோவிலில் ஊர் சாமி அடிகள் சாமி கும்பிட்ட பின்னர் மழை பெய்து விவசாயம் நடைபெற வேண்டும் என்று வணங்கி நடு மடையில் ஊர் சாமியாடி பூசாரி மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை துண்டு வீசப்பட்டு மீன்பிடித் திருவிழா தொடங்கியது.

போட்டிப்போட்டு பிடித்தனர்

அதிகாலையிலிருந்து கண்மாய் கரையில் காத்திருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி வந்து கண்மாயில் இறங்கினர். பின்னர் பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். சாதி, மதம் பாராமல் கண்மாயில் இறங்கி போட்டிப் போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதில் பொதுமக்களுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர்.

ஒரு சிலர் கைகளுக்கு 2 கிலோ முதல் 3 கிலோ வரை எடை கொண்ட விரால் வகை மீன்கள் கிடைத்தன. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story