தூத்துக்குடி புத்தக திருவிழா லோகோ வெளியீடு
தூத்துக்குடியில் அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்கும் புத்தக திருவிழாவுக்கான லோகோவை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வெளியிட்டனர்.
தூத்துக்குடி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா நடக்கிறது. இந்த புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும் கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள ஏதுவாக சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
இந்த புத்தக திருவிழா தொடர்பான லோகோவை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்.பி., சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த புத்தக திருவிழா குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், 'புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அற்புதமான பழக்கம். பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரிய தகவல்களையும் கற்றறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்த புத்தக திருவிழாவை பொதுமக்கள், மாணவ-மாணவிகள், இளைஞர்கள் என அனைவரும் முழுமையாக பயன்படுத்தி, இதில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்' என்றார்.