தூத்துக்குடி: கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோவிலில் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு...!


தூத்துக்குடி: கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோவிலில் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு...!
x

ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோவிலில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கொங்கராயக்குறிச்சியானது மிகப்பெரிய புதை நகரமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள விநாயகர் கோவில் கல்வெட்டு ராஜராஜ சோழனின் கட்டுபாட்டுக்குள் இருந்த சிற்றரசன் ஆண்டதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொங்கராயக்குறிச்சியின் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள கோவில் வலம்புரி விநாயகர் கோவிலாகும். வீரபாண்டீஸ்வரர் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 200 அடி துரத்தில் அமைந்துள்ளது.

பாண்டிய மன்னன்

இக்கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் 9 ஆம் நூற்றாண்டு மற்றும் 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.

வீரபாண்டீசுவரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு வலம்புரி விநாயகர் கோயில்தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த முதன்மை கோவிலாக இருந்து வந்துள்ளது. 9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டாக உள்ளது.

ஆற்றுமணல் சூழ்ந்த கோவில்

மற்றொரு கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இது ராஜராஜ சோழனின் காந்தளுர் சாலை போர் வெற்றியைக் குறிப்பிடுகிறது. வலம்புரி விநாயகர் கோவிலின் கருவறையின் மீது விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது.

கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய சிறிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சுமார் 20 அடி நீளமும். 9 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இக்கோவில் தரைதளத்திற்கும் மேலாக ஆற்றுமணல் சூழ்ந்து காணப்படுகிறது. கருவறையைச் சுற்றியுள்ள ஆற்றுமணலை அகற்றினால் அதில் பல்வேறு கல்வெட்டுகள் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

முறையான அகழாய்வு

கொங்கராயக்குறிச்சியை பொறுத்தவரை தொல்லியல் ஆதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. ஆதிச்சநல்லூர் பறம்பில் காணப்படும் பானையோடுகளைப் போன்று கொங்கராயக்குறிச்சியிலும் ஆற்று மணலில் பானையோடுகள் புதைந்து காணப்படுகிறது.

எனவே இப்பகுதியில் முறையான களஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொண்டால் இவ்வூரின் சிறப்பை மேலும் வெளிக்கொண்டு வரலாம். கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோவிலில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் வரலாற்று ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story