தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை குறித்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 100 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழுவில் திட்டமிட்டபடி பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வழிவிட வேண்டும்
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை. மிரட்டுகிறவர்களுக்கு பயந்து பதவியை விட்டு விலகினால், இயக்கத்தை எப்படி வழிநடத்த முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவருக்கும் பல தொல்லைகள் வந்தன. அதனை அவர் தைரியமாக எதிர்கொண்டார். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து அ.தி.மு.க.வை உருவாக்கினார். அப்படிப்பட்ட நிலையில் கருணாநிதியை பாராட்டி ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பேசினார். அவர் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்று நிலைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டு வருகிறார். பெருந்தன்மையுடன் அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதற்காக எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை அமைக்க வழிவிட வேண்டும். இதனால் அ.தி.மு.க. வலுவடையும். இந்த இயக்கத்தை அழிக்க யாராலும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைதான் வர வேண்டும். அதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் வரவேண்டும். அதையே அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் விரும்புகின்றனர் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.