தூத்துக்குடி தாளமுத்துநகர்புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா சப்பர பவனி


தூத்துக்குடி தாளமுத்துநகர்புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா சப்பர பவனி
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி தாளமுத்துநகர்புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

புனித ஆரோக்கியநாதர் ஆலயம்

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜான்பென்சன் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து புதுக்கோட்டை தூயவளனார் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராபின் அடிகளார் மறையுரை வழங்கினார். தூய சவேரியார்புரம் பங்கு தந்தை குழந்தைராஜ், தாளமுத்துநகர் உதவி பங்குதந்தை அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சப்பர பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ந் திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில் நற்கருணை பவனி நடந்தது. தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர மாலை ஆராதனையும், புதியம்புத்தூர் பங்குதந்தை சந்தீஸ்டன் தலைமையில் மறையுரையும் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று காலை 5.45 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருவிழா திருப்பலி மறைமாவட்ட பொருளாளா் சகாயம் தலைமையில் நடந்தது. தொடர்ந்து ஆரோக்கியநாதர் சப்பர பவனி நடந்தது.

விழா ஏற்பாடுகளை தாளமுத்துநகா் பங்குதந்தையா்கள் நெல்சன்ராஜ், அமல்ராஜ், ஆரோக்கியபுரம் ஊா் நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.


Next Story