கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இ-சேவை மையம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு ஏதுவாக படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திட 2-வது சுற்று விண்ணப்பம் பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நேர்த்தியான சேவை

இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவைமையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு சிறந்த நேர்த்தியான சேவைகளை இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாற்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவுசெய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இ-சேவைமையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரமும், நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரமும் ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும். விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.மேலும் அருகிலுள்ள இ-சேவை மையங்களின் திசை மற்றும் அதன் தகவல்களை முகவரி என்ற ஆண்டராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story