புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உடனே கிடைக்காது..!


புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உடனே கிடைக்காது..!
x

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உடனே கிடைக்காது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story