மாநாடு வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் மீதமான புளியோதரையை மிகைப்படுத்துகிறார்கள- ஆர்.பி.உதயகுமார் பேட்டி


மாநாடு வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் மீதமான புளியோதரையை மிகைப்படுத்துகிறார்கள- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

மாநாடு வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் மீதமான புளியோதரையை மிகைப்படுத்துகிறார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை


மாநாடு வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் மீதமான புளியோதரையை மிகைப்படுத்துகிறார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சி தமிழர் பட்டம் வழங்கியதை கொண்டாடும் விதமாக ஜெயலலிதா பேரவை சார்பில் காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், கருப்பையா, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வெற்றிவேல்முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் தந்து சரித்திரம் படைத்தார். ஜெயலலிதா, அம்மா உணவகம் உள்பட பல்வேறு திட்டங்களை தந்தார். அதே போல் குடிமராமத்து திட்டங்கள், 50 ஆண்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு, 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை தந்து தமிழகத்தில் புரட்சி படைத்ததால், மீண்டும் தமிழகத்தில் இது போன்ற புரட்சியை படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டத்தை மதுரை வாழ் சர்வ சமய பெரியோர்கள் சூட்டி உள்ளனர். இதன் மூலம் மதுரை பெருமை அடைந்துள்ளது. இந்த மாநாட்டிற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. மதுரை மாவட்ட காவல்துறை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டது. மாநாட்டிற்கு வந்த வாகனங்களை 30 கி.மீ தொலைவுக்கு முன்பாகவே திசை திருப்பியதால் தொண்டர்கள் வருவதில் பல தடைகள் ஏற்பட்டது.

புளியோதரை

மாநாட்டின் சிறப்பை உலகமே கொண்டாடி கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு சிலர் கரும்புள்ளி வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் பாத்திரம் எடுத்து செல்லும் போது, சில மிச்சம் இருந்தது. சிதறி கிடந்த உணவை எடுத்துக்காட்டி மிகைப்படுத்துவது வேதனையாக உள்ளது. சுபநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு உணவு வழங்குவதே சவாலான காரியம். ஆனால் மாநாட்டில் 50 லட்சம் பேர் வந்தனர். அதில் 15 லட்சம் பேருக்கு உணவு, குடிநீர் வழங்கினோம். மாநாடு வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் மீதமான புளியோதரையை மிகைப்படுத்துகிறார்கள்.

நீட் எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. ஆனால் தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிரான முதல் கையெழுத்து போடுவோம் என்று கூறினார்கள். இப்போது அவர்களுக்கு கையெழுத்து போடுவதற்கு பேனா கிடைக்கவில்லையா அல்லது கடலில் வைக்கப்படும் பேனாவில் கையெழுத்து போடுவார்களா? என்று மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் சொன்னார். இப்போது ராகுல் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார். உண்ணாவிரதத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். இனிமேல் டி.டி.வி.தினகரன் பேச்சு எடுபடாது. அ.தி.மு.க. தொண்டர்களை ஜாதி, மதம், மொழி ரீதியாக பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story