மது குடித்து பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


மது குடித்து பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

மது குடித்து பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில், மதுபான பாரில் மது குடித்து பலியான இருவரின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

மீன்வியாபாரி-கார் டிரைவர்

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 68). மீன் வியாபாரி. இவர், தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

தஞ்சை பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டி விவேக்(36). கார் டிரைவரான இவர் அவ்வப்போது மீன் வெட்டும் தொழிலும் செய்து வந்தார்.

மதுகுடித்தவர்கள் அடுத்தடுத்து இறந்தனர்

நேற்று முன்தினம் குப்புசாமியும், குட்டி விவேக்கும், மீன்மார்க்கெட்டிற்கு எதிரே உள்ள மதுபான பாருக்கு சென்று திருட்டுத்தனமாக பாரில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். மது குடித்து விட்டு வெளியே வந்த குப்புசாமி மீன் வியாபாரம் செய்யும் இடத்திற்கு வந்தபோது மயங்கி விழுந்தார். அவரை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரம் கழித்து அதே மதுபான பாரில் இருந்து வெளியே வந்த குட்டி விவேக் மதுக்கடை முன்பு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

மதுவில் சயனைடு

இந்த சம்பவம் குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேரும் சயனைடு கலந்த மதுவை குடித்தது தெரிய வந்தது.

உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

இதையடுத்து இறந்த குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோரின் உறவினர்கள், இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக்கூறி உடல்களை வாங்க மறுத்தனர். நேற்று 2-வது நாளாகவும் அவர்கள் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இறந்த இருவரின் உறவினர்களிடமும் ஆர்.டி.ஓ.(பொறுப்பு) பழனிவேல், தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தையில் உடபாடு ஏற்பட்டததையடுத்து இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பா.ஜ.க.வினர் ஆறுதல்

முன்னதாக மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு வந்த பா.ஜ.க, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஸ் உள்ளிட்டோர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் இறந்த குப்புசாமி மனைவியுடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போனில் பேசி ஆறுதல் கூறினார்.

பின்னர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்திலும், நல்ல சாராயத்திலும் இறந்துள்ளனர். தஞ்சையில் இறந்தவர்கள் தொடர்பாக அரசால் தெளிவாக எந்த முடிவையும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

இருவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. டாஸ்மாக்கில் இருந்து மதுவை வாங்கி பிளாக்கில் விற்பனை செய்வது நடக்கிறது. அரசை நடத்துவர்களுக்கும், அரசை சேர்ந்தவர்களுக்கும் கோடியில் வருமான வர வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் எப்போதும் திறந்துள்ளது.

திசை திருப்புகிறது

சயனைடு கலந்த மதுவை குடித்த இருவரும் உறவினர்கள், நண்பர்கள் கிடையாது. எதற்காக சயனைடு கலந்து குடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அரசு தன் மீது உள்ள தவறை மறைப்பதாக திட்டமிட்டு, சயனைடு என்ற பொருளை வைத்து திசை திருப்புகிறது. இறப்பிற்கான உண்மையான காரணத்தை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும்.

கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் போது, டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். சயனைடு என்பது குறித்து யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.


Next Story