முதலீடு செய்து ஏமாந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
சேலத்தில் போலி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்த பொதுமக்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.
ரூ.58 கோடி மோசடி
சேலத்தை தலைமையிடமாக கொண்டு அமுதசுரபி என்ற பெயரில் போலி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்தது. ஆனால் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறி சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.58 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமுதசுரபி நிறுவன நிறுவனர் தங்கப்பழம், தலைவர் ஜெயவேல், இயக்குனர் சரண்யா, பொது மேலாளர் பிரேம் ஆனந்த் ஆகிய 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பு முகாமில் மனு
அமுதசுரபி நிறுவனம் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் 94 கிளைகள் தொடங்கி சுமார் 15 ஆயிரம் பேரிடம் ரூ.58 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 1,095 பேர் கொடுத்த புகாரின்பேரில் ரூ.9½ கோடிக்கு தான் புகார் வந்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்று அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சிறப்பு முகாமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று நடத்தினர்.
லைன்மேட்டில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடந்த இருந்த முகாமில், பொருளாதார குற்றப்பிரிவின் மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஆங்கிட் ஜெயின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். அப்போது, அமுதசுரபி நிறுவனம் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்களிடம் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தமுகாமில், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.