'பிரீபவுண்டேசன்' படிப்பை முடித்தவர்களும் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள்தான்
‘பிரீபவுண்டேசன்’ படிப்பை முடித்தவர்களும் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள்தான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில் 10-ம் வகுப்பிற்கு இணையான பிரீ பவுண்டேசன் படிப்பை முடித்த பலர் 2-ம் நிலை திறன்மிகு உதவியாளர் உள்ளிட்ட பல பணிகளில் இருந்துள்ளனர். பலர் பதவி உயர்வும் பெற்று உள்ளனர். இந்த கல்வித்தகுதி உடையவர்களை பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் கிடையாது என 2017-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின்படி, பலர் பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்தும், தங்களது பதவி இறக்கத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பணியை தொடரவும், அதற்கான பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிடுமாறு, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மர் உள்ளிட்ட ஏராளமானோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, பிரீ பவுண்டேசன் படிப்பு 10-ம் வகுப்புக்கு நிகரானது கிடையாது என்று அறிக்கை அளித்தது. அதன்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
2017-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையை எதிர்த்த மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். மனுதாரர்கள் அனைவரும் அரசாணை வெளியாவதற்கு முன்பாகவே தங்களது கல்வித்தகுதியை பெற்றுள்ளனர். அதாவது, இவர்கள் அனைவரும் பிரீ பவுண்டேசன் படிப்பை 2013-ம் ஆண்டுக்குள்ளாகவே முடித்துவிட்டனர்.
அந்த படிப்பு, 10-ம் வகுப்புக்கு இணையாகாது என்பதை 2017-ல்தான் தான் முடிவு செய்துள்ளனர். இதேபோன்ற வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை பின்பற்றி, பிரீ பவுண்டேசன் படிப்பை முடித்த மனுதாரர்கள் அனைவரும் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் என உத்தரவிடப்படுகிறது. எனவே அவர்களுக்குரிய பதவி உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை அதிகாரிகள் 8 வாரத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.