பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வு எழுத வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவ, மாணவிகள் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் துணைத்தேர்வுக்கு புதியதாக விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் நாளை மறுநாள் மாலை 5 மணிக்குள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் (Government Examinations Service Centers) மூலம் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நேரடி தனித்தேர்வராக பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கும், 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதி திட்டம்
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் பெற்று பதிவேற்றம் செய்யலாம். பிளஸ்-2 தேர்விற்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 ஆகும். கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.