பட்ஜெட் நகலை எரிக்க முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்
திருவாடானையில் பட்ஜெட் நகலை எரிக்க முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓரியூர் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் ராமநாதன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் அருள்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் நலன்களை முற்றிலுமாக புறக்கணித்த மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன,
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று பட்ஜெட் நகலை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க செயலாளர் தோட்டமங்கலம் ராசு, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சேதுராமு, விவசாய சங்க தாலுகா பொருளாளர் நாகநாதன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பாலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.