அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:15 AM IST (Updated: 26 Oct 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு குழந்தைகள் இல்லம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயில்வதற்காக சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் சாலாமேட்டில் அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றது.

இந்த இல்லத்தில் 84 ஆண் குழந்தைகள், வரவேற்பு பிரிவில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் என 98 குழந்தைகள் தங்கி கல்வி பயில்வதற்கு இடவசதி உள்ளது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 6 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கும் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், இல்லத்தின் வளாகத்தில் உள்ள அரசு நேருஜி நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி படித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு தேவையான தங்கும் அறை, வகுப்பறைகள், நூலகம், கணிணி மற்றும் தட்டச்சு பயில்வதற்கான அறைகள் உள்ளன.

ஆகவே பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து பயனடையுமாறும், இதற்கு விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் (பழைய உணவக கட்டிடம்) என்ற முகவரியையும், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் 04146-290659 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story