ஓட்டலுக்கு இரவில் பிறந்த நாள் கொண்டாட சென்றவர்கள் வீட்டில் 20 பவுன் கொள்ளை


ஓட்டலுக்கு இரவில் பிறந்த நாள் கொண்டாட சென்றவர்கள் வீட்டில் 20 பவுன் கொள்ளை
x

பிறந்த நாள் கொண்டாட ஓட்டலுக்கு சென்றிருந்தவர்கள் வீட்டின் 20 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

பிறந்த நாள் கொண்டாட ஓட்டலுக்கு சென்றிருந்தவர்கள் வீட்டின் 20 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

20 பவுன் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் முத்துபால்பாண்டி (வயது 39). மதுரையில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புவனேசுவரி. நேற்று முன்தினம் முத்துபால்பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால், அவர் மற்றும் அவருடைய மனைவி புவனேசுவரி, தாய் கமலம் மற்றும் குடுத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டாட முடிவு செய்தனர்.

இரவு 9.30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகையுடன் கூடிய பெட்டியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். பின்னர் நகைப் பெட்டியை மட்டும் அருகேயுள்ள புதரில் வீசிச்சென்றனர்.

போலீசில் புகார்

பிறந்தநாள் கொண்டாட்டத்தினை முடித்துவிட்டு இரவு 11 மணி அளவில் முத்துபால்பாண்டி குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.

விசாரணை

இந்த சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை-விருதுநகர் நான்குவழிச் சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் முத்துபால்பாண்டி வீட்டில் கைவரிசை காட்டிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story