அரசு சார்பில் ஆன்மிக பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்
ராமேசுவரத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அரசு சார்பில் ஆன்மிக பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை,
2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், 'ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இந்த ஆண்டு 200 பேர் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்' என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆன்மிக பயணத்துக்கு இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் மண்டலத்துக்கு 10 பேர் வீதம் 200 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீண்டும் அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிக பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்மிக பயணத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.