ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம்


ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
x

தஞ்சை அருகே பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அறுவடை பணிகள்

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்தது.தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, ஆலக்குடி என கல்லணை கால்வாய் தண்ணீரை கொண்டு, பாசன வசதி பெறும் பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டது. இயற்கை இடர்பாடுகளை சமாளித்து தற்போது இப்பகுதியில் அறுவடைப்பணிகள் முடிவடைந்துள்ளது.

மழை கொட்டியது

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய சித்திரக்குடி, வல்லம், ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, 8.கரம்பை ஆகிய பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. கோடை வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

நெல் மூட்டைகள் நனைந்தன

வல்லத்தில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. ஒரு சில இடங்களில் கால தாமதமாக நட்ட விவசாயிகள் மேற்கொண்டுள்ள அறுவடை பணிகள் மழையால் பாதிக்கப்பட்டது.வல்லம், ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து இன்னும் கொள்முதல் செய்யப்படாத ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மழைபெய்த நேரத்தில் விவசாயிகள் தார்பாய் கொண்டு மூட்டைகளை மூடினாலும் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன.

விவசாயிகள் கவலை

இதனால் இவற்றை மீண்டும் காய வைக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.இதைப்போல சாலையில் நெல்லை விவசாயிகள் காயவைப்பதற்காக கொட்டி வைத்திருந்தனர். திடீர் மழையால் சாலையில் கொட்டப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்தது. இதை காய வைப்பதற்கு கூடுதல் நாள் மற்றும் செலவாகும் என்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story