ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்
வலங்கைமான்
ஆலங்குடி திறந்த வெளி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 50 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 15 ஆயிரம் எக்டேர் விளைநிலங்களில் குறுவை, தாளடி, சம்பா நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் அறுவடை செய்யும் நெல்களை விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக வலங்கைமானில் பல்வேறு கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
திறந்தவெளி சேமிப்பு கிடங்கு
மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை ஆலங்குடி, திருவோணமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த நெல்மூட்டைகள் நீடாமங்கலம், திருவாரூர், பேரளம் உள்ளிட்ட ெரயில் நிலையங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அரவைக்காக வெளிமாவட்ட, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பின்னர் நெல்மூட்டைகள் அரிசியாக மாற்றப்பட்டு பல்வேறு அத்தியாவசிய அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மழையில் நனைந்து வரும் நெல்மூட்டைகள்
வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற நிலையிலும், திறந்தவெளி கிடங்கு முழுவதும் சேறும், சகதியுமாகவும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.