பருவதமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பருவதமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பருவதமலையில் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக பச்சையம்மன் கோவிலில் இருந்து வீரபத்திரன் கோவில் செல்லும் வழியில் உள்ள ஓடையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததால் இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை பக்தர்களை மலையேற வனத்துறையினரும், போலீசாரும் அனுமதிக்கவில்லை ஓடையில் வெள்ளம் குறைந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தி.சரவணன் எம்.எல்.ஏ. பருவதமலை அடிவாரம் வரை சென்று பக்தர்களின் வருகை குறித்தும், அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் மலை மேல் பக்தர்கள் கையில் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கவர்களை பெற்றுக்கொண்டு மஞ்சப்பைகளில் அபிஷேக பொருட்களை மாற்றி கொடுத்தார். அப்போது துணி பைகள் எடுத்து வந்தவர்களை பாராட்டினார்.