ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்
காவிரி படுகையில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கலெக்டரிடம், விவசாயிகள்-தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
காவிரி படுகையில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள்-தொழிலாளர் சங்கத்தினர்,கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
திருவாரூரில் தமிழக விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சேதுராமன், செயலாளர் ராமமூர்த்தி, அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க தலைவர் சிவனேசன், சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்து பல தொழில்கள், வணிக நிறுவனங்கள் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஓ.என்.ஜி.சி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
ஓ.என்.ஜி.சி நிறுவனம் பலமுறை மீத்தேன் மற்றும் ஷேல் கியாஸ் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என உறுதியாக தெரிவித்து விட்டது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டிற்கு ஆயிரம் கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. படித்த பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது. சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம, நகர பகுதிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வேலை இழக்கும் அபாயம்
விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாமல் பல்வேறு வகையில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை சிலர் கூறி வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்யும் நோக்கத்துடன் தவறான ஆதாரமில்லாத அவதூறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீது பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.