மரக்காணத்தில் இறால் பண்ணை மேலாளருக்கு ரூ.8½ லட்சம் ஊதியம் கொடுக்காமல் மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
மரக்காணத்தில் இறால் பண்ணை மேலாளருக்கு ரூ.8½ லட்சம் ஊதியம் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
மரக்காணம் மேலவீதியை சேர்ந்த பிரசாத் (வயது 57) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நான் கடந்த 30 ஆண்டுகளாக மரக்காணத்தில் வசித்து வருகிறேன். சென்னையை சேர்ந்த ஒருவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அவர் மரக்காணம் கீழ்பேட்டையில் இறால் பண்ணை தொடங்கிபோது அங்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியில் சேருமாறு கூறியதன்பேரில் கடந்த 11 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றினேன். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் ஊதியம் கொடுத்தார்.
இருப்பினும் பின்னர் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றினேன். இதனிடையே அவர், அதே பகுதியில் புதிதாக ஒரு கட்டிடத்தை உரிய அனுமதி பெறாமல் கட்டுவது குறித்து கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.
எனக்கு தர வேண்டிய ஊதிய நிலுவை ரூ.8.60 லட்சத்தை கேட்டதற்கு கொடுக்காமல் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.