ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை
ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கள்ளக்காதலன் மிரட்டியதால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதலனும் விஷம் குடித்து இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர்
கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 49) பெயிண்டர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சலீமிற்கு 34 வயது பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சலீம் அந்த பெண்ணிற்கு தெரியாமல் அவரை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனிடையே கள்ளக்காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண், சலீமை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்தார். இதனிடையே சலீம், தான் எடுத்து வைத்திருந்த அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். இதையடுத்து அவர் கடந்த 6-ந் தேதி அந்த பெண்ணின் அக்காவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கள்ளக்காதல் குறித்து எடுத்து கூறியுள்ளார்.
மேலும் தனது செல்போனில் உள்ள அவரது தங்கையின் ஆபாச புகைப்படங்களை அவரிடம் காண்பித்தார். பின்னர் தனக்கு பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இதனால் அச்சம் அடைந்த அக்காள், தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியுள்ளார்.
தற்கொலை
அப்போது நடந்த சம்பவங்களை கேட்ட அவளது சகோதரி திடீரென்று செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் இடையே அவமானம் ஏற்படும் என்று நினைத்த அவர் நேற்றுமுன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்தார்
இதனிடையே அந்த பெண்ணின் உறவினர்கள் சலீம் பணம் கேட்டு ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியதால் தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், எனவே அவரது சாவுக்கு காரணமான சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் சலீம் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணைக்காக தன்னை தேடுவதை அறிந்த சலீம் பயத்தினால் விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.