துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல்


துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல்
x

துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் எதிரே சோமையாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்களால் அப்பகுதி இளைஞர்கள் மாணவர்களுக்கிடையே குற்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் இதை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவிட்டார். அதன்பேரில் தெற்கு போலீஸ் ஏட்டு தமிழ்வாணன், காவலர் செல்லப்பாண்டியன் இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கோவில் அருகே மைதானத்தில் ரோந்து சென்றனர். அப்பகுதி வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போக சொன்னார்கள்.

ஆனால் அந்த வாலிபர்கள் மறுத்ததால் இன்ஸ்பெக்டர் சார்லஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்த வைரவன்(வயது 37) தலைமையில் சோமையாபுரத்தை சேர்ந்த ராசுகுட்டி(28) மற்றும் பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலுக்கு முயன்றனர்.

மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட போலீசாரை அப்பகுதியை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story