பெண் தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
பெண் தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி மீது திருச்சி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் பிரசன்னா வெங்கடேஷ். இவரது மனைவி சித்ரா (வயது 48). தொழிலதிபரான இவர் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-நான் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். மேலும் தொண்டு நிறுவனம் மற்றும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறேன்.எனது தொண்டு நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த தம்பதி மற்றும் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிலர் தன்னார்வலர்களாக இணைத்து கொண்டனர். இவர்கள் என்னிடம் வீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு சிங்கப்பூரில் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக உதவி கேட்டனர்.இதை நம்பி அவர்களிடம் ரூ.1½ லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அந்த பணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சென்று சேரவில்லை. கடலூர் மாவட்டத்தில் சில குழந்தைகளுக்கு உதவி செய்ய பல்வேறு தவணைகளில் ரூ.40 ஆயிரம் வழங்கினேன். அந்த பணமும் குழந்தைகளுக்கு சென்று சேரவில்லை. இது பற்றி அறிந்து அவர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டினார்கள்.மேலும், அவர்கள் என்னுடன் பழகி கொண்டு இருந்த காலகட்டத்தில் லண்டனில் படிக்கும் எனது மகளின் புகைப்படங்களை எனது செல்போனில் இருந்து டவுன்லோடு செய்து வைத்து கொண்டனர். அந்த படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.