வீட்டை அபகரித்து மூதாட்டிக்கு கொலை மிரட்டல்; போலீஸ் கமிஷனரிடம் புகார்


வீட்டை அபகரித்து மூதாட்டிக்கு கொலை மிரட்டல்; போலீஸ் கமிஷனரிடம் புகார்
x

வீட்டை அபகரித்து மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருச்சி

கொலை மிரட்டல்

திருச்சி பொன்மலை இந்திராநகரை சேர்ந்தவர் லட்சுமியம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது லட்சுமியம்மாள் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 3 வருடமாக உதவி செய்யும் நோக்கத்துடன் பணம் கொடுத்துவிட்டு, லட்சுமியம்மாள் வசிக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் மூதாட்டிக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து லட்சுமியம்மாள் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் இந்திரன் உதவியுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் புகார் மனு அளித்தார். போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்ணாடி உடைப்பு

*திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோடு காந்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் (51). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு பாரில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் பாருக்கு வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். அங்கு இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கருமண்டபம் மாந்தோப்புபகுதியை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

*புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (66). இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஆறுமுகத்தை தாக்கினார். இது குறித்த புகாரின்பேரில் அவரை தாக்கியதாக அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அன்பரசுவை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.

பொக்லைன் எந்திரம் திருட்டு

தர்மபுரி மாவட்டம், கொட்டப்பட்டி கிராம பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (32). இவரிடம் தர்மபுரியை சேர்ந்த தினேஷ், ரகுபதி ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு பெக்லைன் எந்திரத்தை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதையடுத்து நாகராஜன் எடைமலைப்பட்டிபுதூர் மேக்குடி பஸ் நிறுத்தத்தில் ஒருவரிடம் பெக்லைன் எந்திரத்தை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வாடகைக்கு கேட்ட நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story