லாரி மீது மோதி பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி
திருப்போரூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
பள்ளி மாணவர்
சென்னையை அடுத்த பெருங்குடி கல்குட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27). இவர், வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் வேலை செய்துவந்தார். இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கரும்பாக்கத்தை அடுத்த விரால்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுபா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.
திருமணத்துக்கு பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் நாகராஜ் வசித்து வந்தார்.
இவரது வீட்டுக்கு கொட்டிவாக்கத்தை சேர்ந்த உறவினர் காந்தி என்பவரது மகன் பாலாஜி (14) அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு வந்திருந்தார். இவர், திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு விரால்பாக்கம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் அந்த பகுதி வாலிபர்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். இதில் நாகராஜ், பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ஜோஷ்வா என்பவரது புதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிபார்த்துவிட்டு வருவதாக நாகராஜ் கூறினார். அதன்படி புதிய மோட்டார்சைக்கிளில் நாகராஜ், பாலாஜி மற்றும் கரும்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு 9-ம் வகுப்பு மாணவரான ரிஷாக் (14) ஆகியோருடன் கொட்டமேடு வரை சென்று வருவதாக கூறிச்சென்றார். புத்தாண்டு கொண்டாட்ட உற்சாகத்தில் புதிய மோட்டார் சைக்கிளில் நாகராஜ் வேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
3 பேர் பலி
அப்போது வெங்கூர் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்ற மினி லாரி மீது நாகராஜ் ஓட்டிச்சென்ற புதிய மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் புதிய மோட்டார்சைக்கிள் அப்பளம்போல் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாகராஜ் மற்றும் பள்ளி மாணவர்களான பாலாஜி, ரிஷாக் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருப்போரூர் போலீசார், பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான 3 பேரின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.