விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்


விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்
x

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மும்முனை மின்சாரம்

பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பாலாற்றின் கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூரை அடுத்த ஊசூர், சின்னச்சேரி, ஒடுகத்தூர் பகுதிகளில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பல பகுதிகளில் சரியாக மின்சாரம் வழங்கப்படவில்லை. எனவே பயிர்கள் காய்ந்து வருகிறது. விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். எந்த காலத்தில் எவ்வகையான பயிர்கள் பயிர் செய்ய வேண்டும் என்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் சரியான பயிர்களை பயிர் செய்து அதிகளவு சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியும்.

கால்நடை மருந்துகள் இருப்பு

பாம்பு கடித்து இறந்தால் அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பாம்பு கடித்து ரூ.5 லட்சம் செலவு செய்த நபருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. பாம்பு கடித்து சிகிச்சை மேற்கொள்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கால்நடைகள் மடிநோயால் அதிகளவு பாதிக்கப்படுகிறது. எனவே அவற்றுக்கு உரிய மருந்துகள் வழங்க வேண்டும். பென்னாத்தூர் கால்நடை மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

விவசாயிகளின் கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story